Tuesday, 14 February 2017

காதல் நினைவலைகள் - (a man's perspective) - By Priyadharshini Madhavan


நீயும் நானும்
சேர்ந்திருந்த காலம்
வானும் மண்ணும் 
தொட்டுக்கொண்ட காலம்
நினைக்கும்போதெல்லாம் - என்
நெஞ்சில் வசந்த காலம்
ஆனால் இன்றோ - என்
கண்களில் கார்காலம்

கணினி மீட்டெடுத்த 
என் கண்மணியே
பாலைவனமாய் வறண்டிருந்த
என் இதயத்தில்
பன்னீரை தெளித்தாயே

அன்பாய் பேசினாய்
ப்ரம்மித்து  நின்றேன் - அளவில்லா
நேசம் காட்டினாய்
துளிர்த்து எழுந்தேன்
சிரிக்க வைத்தாய் - கண்ணில்
 நீர் பனிக்க மெய்மறந்தேன்
பேசி அசத்தினாய் 
உருகி உருகி போனேன்

ஒரு காதலனாய் காதலித்து
சிறைப் பிடித்தாய் என்னை
நானோ திக்குமுக்காடி செய்வதறியாமல் 
உன் காதல் என்னும் தீவில்
கைதியாய் சரண் அடைந்தேன்

காவல் காத்து வைத்திருந்த 
என் இதயம் செயலற்று
உன்னிடம் தஞ்சம் புக - நீயோ 
உன் இதயம் என்னும்
இரும்பு கோட்டைக்குள் பூட்டி
என்னை ஆயுள் கைதியாக்கினாய்
சாவியையும் தொலைத்து
விஷம்மமாய் சிரித்து மகிழ்ந்தாய்

அத்தனை ஆளுமையடி 
உனக்கு என் மேல் 
என் ஆறு அடியும்
உன் கைப்பிடியில்

என் விடியலிலும் நீ
என் உரக்கத்திலும் நீ
என் நெஞ்சத்திலும் நீ
என் இதய துடிப்புலும் நீ
இருந்தும்
நீ நீயாய் இருந்தாய்
நான் நானாய் இருந்தேன்

இன்று என்னோடு நீ இல்லை
என்றாலும் - நம் காதல்
இல்லை என்றாகிவிடுமோ- நம் 
காதல் தான் பொய்யாகிடுமோ

பிரிவு என்பது உணர்வுக்கு அன்றி
வெறும் உடலுக்கு தான் அன்றோ
அற்புதமான அந்த நாட்களை
அசைப் போட்டு அகமகிழாமல்
அழுது கரைப்பது தான் மடமையன்றோ

தனிமையிலும் இனிமை காண்கிறேன்
சுகமான உன் நினைவலைகளுடன்
சுவாரஸ்யமாய் நாம் பயணித்த 
அந்த பொக்கிஷமான நாட்களுடன்

மாதங்கள் கடக்கலாம்
வருடங்கள் மாறலாம் - ஆனால்
பாராமலும் பேசாமலும்
நம் நெஞ்சத்தில் காதல் மட்டும்
என்றென்றும் நிலைத்திடும்
தொடர்ந்திடும் ஏழேழ் ஜென்மம்



                 End 

Wednesday, 18 January 2017

கடற்கறை தாகம் - By Priyadharshini Madhavan

இனிமையான மாலை நேரம்..
கடற்கரையிலோ நடை பயணம்..
இடை இடையே  சிறு சலனம்..
நெஞ்சின் ஓரம் வரும் தருணம்..

எத்தனை கோடி நினைவுகள் 
புதைந்து கிடக்குது இம் மணற்பரப்பில்..
அலைகள் போல் அவ்வெண்ணங்கள் 
அசைந்தாடுது என் மனதில்..

பிஞ்சு கைகள் கோர்த்து தந்தையுடன் அலைகளில் கால்கள் பதித்ததை சொல்லவா !
சிறுமியாய் மணல் வீடுகட்டி தமையனுடன் 
ஓடி ஆடியதை சொல்லவா !
இல்லை, அவன்  நண்பர்களுடன்  
க்ரிக்கெட் ஆடுவதை கண் கொட்டாமல் கண்டு மகிழ்ந்ததை தான் சொல்லவா!!

கல்லூரி நாட்களில் வகுப்பை மட்டம் அடித்து
வெயிலில் லூட்டி அடித்ததும் இங்கு தான்..
புயல் என்றும் பாராமல் மழையை 
ரசிக்க வந்ததும் இங்கு தான்..
பௌர்ணமி இரவின் மயக்கத்தை 
களிக்க வந்ததும் இங்கு தான்..
கனவுகளைச் சுமந்து மனதை
தொலைத்ததும் இங்கு தான்..

கரை ஓரத்தில் உட்கார்ந்து 
கடலைகளுடன் கடலை போட்டோம்..
அலைகளின் மேல் கால்கள் பதித்து 
இளம் கன்று போல் துள்ளி விளையாடினோம்..
அங்கு கூடி திரிந்த காளைகளை
சீண்டி நகைத்து மகிழ்ந்தோம்..
கவலைகள் அனைத்தும் துறந்து
பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்தோம்..

அலை அவள் என் துணை..
அவளே என் வழித்துணை..
அவளின் ஓசை என் மனோபலம்..
அவள் ஆரவாரமோ என் குதூகலம் !

கொஞ்சி பேசியதும் அவளிடமே..
சந்தோஷ கோலோச்சலும் அவளிடமே..!
முதல் காதலை பகிர்ந்ததும் அவளிடமே..
அதை அழுது கரைத்ததும் அவளிடமே !!

புது வாழ்வை
புது சந்தோஷத்தை,
புது வரவின் துவக்கத்தை,
பகிர்ந்து கொண்டாடியதும் 
சுகமான அவளின் மடியிலே..! 

வாழ்க்கையில் செல்ல வேண்டிய 
பாதையோ இன்னும் நெடுந்தூரம் 
அது வரை தொடர்ந்திடும் 
கடற்கரையுடன் என் பந்தம் - முடிவுற்றது இன்றைய என் நடைப்பயணம்
தற்காலிகமாய் ஓய்வெடுத்தன
என் எண்ண ஓட்டங்களும்


Saturday, 7 January 2017

பார்த்தனின் ஸாரதி ( Paarthanin Sarathy)

பார்த்தனுக்கு சாரதியே
பாஞ்சாலிக்கு துணையாய் நின்றவனே

அல்லிக்கேணியின் முடிசூடா அரசனே
எங்கள் இதயம் கவர்ந்த வேங்கடக்ருஷ்ணனே

முறுக்கு மீசை உன் வசீகரம்
அதை பார்த்தாலே பரவசம் - என்
கண்கள் முழுதும் பனித்திடும்
உன் திருமேனி கண்டதும் - என்
உள்ளம் எல்லாம் இனித்திடும்

பார்த்தனின் ஆசைக்கு இணங்கி
சாரதியாய், நிராயுதபாணியாய் நின்றாய்
ஆனாலும் அல்லிக்கேணி வாசிகளை
கம்பீரமாய் காத்து அருளுகிறாய்

சுனாமியா, வெள்ளமா, வார்தாவா
ஏ அல்லிக்கேணி மானிடா
ஏனடா அச்சம் உனக்கு - கலங்காதிரு
காவல் தெய்வம் நான் இருக்கிறேன் உனக்கு
என்றல்லவோ இரட்சித்து நிற்கிறாய்

உன் தரிசனம் நாடி
பாரோர் காத்திருக்க
நீயோ எங்களைத் தேடி
வீதியிலே வருகிறாய் ஓடோடி

ருக்மிணியின் மணாளனே - இந்த
ருக்மணியின் இதயம் கவர்ந்தவனே

உன் திவ்யதேசத்தில் தடம் பதிக்க
எண்ணிலடங்கோர் காத்திருக்க - நீயோ
இந்த அற்பைக்கு இடம் அளித்து
அழகு பார்க்கிறாய்

இதை பூர்வ ஜென்ம பலன் என்பதா
இல்லை இப்பிறவிப் பயன் என்பதா

சோம்பலிட்டு உன்னைக் காண
நான் வாராமல் போனாலும் - உன்
நிவேதனம் என்னை அடைய செய்து
கைக் கொட்டி வேடிக்கைப் பார்க்கிறாய்

என் சேவை புறிந்த வரதனின் பௌத்திரியே
சோம்பல் ஏனடி உனக்கு - என்று
உன் அவதார பேர் இட்ட
ஶ்ரீராமனை கோடிட்டு காட்டினாய்
உன்னை காண வெள்ளிதோறும் இழுக்கிறாய்

வேங்கடவனுக்கு அமிர்தம் லட்டு
அவன் தமையனுக்கோ உப்பில்லா அண்ணம்
கல்லழகனுக்கு தோசை - உனக்கோ
நெய், முந்திரி கமழும் சர்க்கரை பொங்கல்

மாதங்களில் மார்கழி - நீயோ
இன்று மீசை மழி
இதை காணவே நாங்கள் ஓடோடி

எட்டிப் போக நினைக்கும்போதெல்லாம்
என்னைக் கட்டிப் போட்டு இழுக்கிறாய்
எங்கேயடி போக எத்தனிக்கிறாய்
என் இருப்பிடமே உனக்கு
ஸ்வர்க பூமி என்கிறாய்

ஊரார் அறியாமல் போகலாம் - ஆனால்
உனக்கு தெரியாமல் போகுமோ
இந்த பேதையின் மனமெல்லாம்
உன் வசமே - அவள் வாழ்வில்
நீ இன்றி அசையாதே அணு அளவும்

(என்னமோ போடா "பாச்சா" என்னையும் இப்படி அழகாய் எழுத வைத்து விட்டாயே !!! 😀😀)