Saturday, 7 January 2017

பார்த்தனின் ஸாரதி ( Paarthanin Sarathy)

பார்த்தனுக்கு சாரதியே
பாஞ்சாலிக்கு துணையாய் நின்றவனே

அல்லிக்கேணியின் முடிசூடா அரசனே
எங்கள் இதயம் கவர்ந்த வேங்கடக்ருஷ்ணனே

முறுக்கு மீசை உன் வசீகரம்
அதை பார்த்தாலே பரவசம் - என்
கண்கள் முழுதும் பனித்திடும்
உன் திருமேனி கண்டதும் - என்
உள்ளம் எல்லாம் இனித்திடும்

பார்த்தனின் ஆசைக்கு இணங்கி
சாரதியாய், நிராயுதபாணியாய் நின்றாய்
ஆனாலும் அல்லிக்கேணி வாசிகளை
கம்பீரமாய் காத்து அருளுகிறாய்

சுனாமியா, வெள்ளமா, வார்தாவா
ஏ அல்லிக்கேணி மானிடா
ஏனடா அச்சம் உனக்கு - கலங்காதிரு
காவல் தெய்வம் நான் இருக்கிறேன் உனக்கு
என்றல்லவோ இரட்சித்து நிற்கிறாய்

உன் தரிசனம் நாடி
பாரோர் காத்திருக்க
நீயோ எங்களைத் தேடி
வீதியிலே வருகிறாய் ஓடோடி

ருக்மிணியின் மணாளனே - இந்த
ருக்மணியின் இதயம் கவர்ந்தவனே

உன் திவ்யதேசத்தில் தடம் பதிக்க
எண்ணிலடங்கோர் காத்திருக்க - நீயோ
இந்த அற்பைக்கு இடம் அளித்து
அழகு பார்க்கிறாய்

இதை பூர்வ ஜென்ம பலன் என்பதா
இல்லை இப்பிறவிப் பயன் என்பதா

சோம்பலிட்டு உன்னைக் காண
நான் வாராமல் போனாலும் - உன்
நிவேதனம் என்னை அடைய செய்து
கைக் கொட்டி வேடிக்கைப் பார்க்கிறாய்

என் சேவை புறிந்த வரதனின் பௌத்திரியே
சோம்பல் ஏனடி உனக்கு - என்று
உன் அவதார பேர் இட்ட
ஶ்ரீராமனை கோடிட்டு காட்டினாய்
உன்னை காண வெள்ளிதோறும் இழுக்கிறாய்

வேங்கடவனுக்கு அமிர்தம் லட்டு
அவன் தமையனுக்கோ உப்பில்லா அண்ணம்
கல்லழகனுக்கு தோசை - உனக்கோ
நெய், முந்திரி கமழும் சர்க்கரை பொங்கல்

மாதங்களில் மார்கழி - நீயோ
இன்று மீசை மழி
இதை காணவே நாங்கள் ஓடோடி

எட்டிப் போக நினைக்கும்போதெல்லாம்
என்னைக் கட்டிப் போட்டு இழுக்கிறாய்
எங்கேயடி போக எத்தனிக்கிறாய்
என் இருப்பிடமே உனக்கு
ஸ்வர்க பூமி என்கிறாய்

ஊரார் அறியாமல் போகலாம் - ஆனால்
உனக்கு தெரியாமல் போகுமோ
இந்த பேதையின் மனமெல்லாம்
உன் வசமே - அவள் வாழ்வில்
நீ இன்றி அசையாதே அணு அளவும்

(என்னமோ போடா "பாச்சா" என்னையும் இப்படி அழகாய் எழுத வைத்து விட்டாயே !!! 😀😀)

6 comments:

  1. Wonderful Priya. Expect more such beautiful poems.

    ~~ KP

    ReplyDelete
  2. 🤗🤗🤗
    Didn't know you r so poetic mam...really dumbstruck.....

    ReplyDelete