இனிமையான மாலை நேரம்..
கடற்கரையிலோ நடை பயணம்..
இடை இடையே சிறு சலனம்..
நெஞ்சின் ஓரம் வரும் தருணம்..
எத்தனை கோடி நினைவுகள்
புதைந்து கிடக்குது இம் மணற்பரப்பில்..
அலைகள் போல் அவ்வெண்ணங்கள்
அசைந்தாடுது என் மனதில்..
பிஞ்சு கைகள் கோர்த்து தந்தையுடன் அலைகளில் கால்கள் பதித்ததை சொல்லவா !
சிறுமியாய் மணல் வீடுகட்டி தமையனுடன்
ஓடி ஆடியதை சொல்லவா !
இல்லை, அவன் நண்பர்களுடன்
க்ரிக்கெட் ஆடுவதை கண் கொட்டாமல் கண்டு மகிழ்ந்ததை தான் சொல்லவா!!
கல்லூரி நாட்களில் வகுப்பை மட்டம் அடித்து
வெயிலில் லூட்டி அடித்ததும் இங்கு தான்..
புயல் என்றும் பாராமல் மழையை
ரசிக்க வந்ததும் இங்கு தான்..
பௌர்ணமி இரவின் மயக்கத்தை
களிக்க வந்ததும் இங்கு தான்..
கனவுகளைச் சுமந்து மனதை
தொலைத்ததும் இங்கு தான்..
கரை ஓரத்தில் உட்கார்ந்து
கடலைகளுடன் கடலை போட்டோம்..
அலைகளின் மேல் கால்கள் பதித்து
இளம் கன்று போல் துள்ளி விளையாடினோம்..
அங்கு கூடி திரிந்த காளைகளை
சீண்டி நகைத்து மகிழ்ந்தோம்..
கவலைகள் அனைத்தும் துறந்து
பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்தோம்..
அலை அவள் என் துணை..
அவளே என் வழித்துணை..
அவளின் ஓசை என் மனோபலம்..
அவள் ஆரவாரமோ என் குதூகலம் !
கொஞ்சி பேசியதும் அவளிடமே..
சந்தோஷ கோலோச்சலும் அவளிடமே..!
முதல் காதலை பகிர்ந்ததும் அவளிடமே..
அதை அழுது கரைத்ததும் அவளிடமே !!
புது வாழ்வை,
புது சந்தோஷத்தை,
புது வரவின் துவக்கத்தை,
பகிர்ந்து கொண்டாடியதும்
சுகமான அவளின் மடியிலே..!
வாழ்க்கையில் செல்ல வேண்டிய
பாதையோ இன்னும் நெடுந்தூரம்
அது வரை தொடர்ந்திடும்
கடற்கரையுடன் என் பந்தம் - முடிவுற்றது இன்றைய என் நடைப்பயணம்
தற்காலிகமாய் ஓய்வெடுத்தன
என் எண்ண ஓட்டங்களும்.